சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சியில் வெறிநாய்க்கடி நோய் (ரேபிஸ்) பாதிப்பிலி ருந்து பொதுமக்களை காக்கவும், ரேபிஸ் இல்லா சென்னையை உருவாக்கவும் அனைத்து தெரு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் முகாம் கடந்த ஆக.11-ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த முகாம்களில் திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் ஆகிய 4 மண்டலங்களிலும் அனைத்து இடங்களிலும் உள்ள தெரு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாதவரம் மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் உள்ள அனைத்து தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தெரு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 60,216 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 12,684, அம்பத்தூர் மண்டலத்தில் 11,895 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது மாதவரம் மற்றும் அம்பத்தூர் மண்டலத்தில் தலா 10 குழுக்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. பிற மண்டலங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட்டு, 50 வேலை நாட்களுக்குள் அனைத்து மண்டலங்களிலும் சுமார் 2 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

