வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு

Priya
793 Views
2 Min Read

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 7.6 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.6) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

7, 8 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 9, 10 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 11-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

உள் தமிழகத்தில் நாளை முதல் 9-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வழக்கத்தை ஒட்டி இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை மாவட்டம் பேரையூர், திருமங்கலத்தில் 8 செமீ, கடலூரில் 5 செமீ, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, புதுச்சேரி திருக்கனூரில் 5 செமீ, மதுரை விமான நிலையம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், வெம்பாக்கம், விருதுநகர் ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply