‘4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணமா?’ – எஸ்பிஐ வாபஸ் பெற தமிழக காங். வலியுறுத்தல்

Priya
612 Views
1 Min Read

“ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கில் இருந்து 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம், ஜிஎஸ்டி வசூலிக்கும் உத்தரவை மத்திய அரசு, எஸ்பிஐ திரும்பப் பெற வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஜீரோ பேலன்ஸ் கணக்குகள், ஏழை எளிய சாமானிய மக்கள் நவீன வங்கிச் சேவையைப் பெற அடித்தளமிட்டன.

ஏழை மக்கள் பயன்படுத்தும் இந்த கணக்கில்தான் தற்போது மத்திய பாஜக அரசு கைவைக்கிறது. கார்ப்பரேட்களுக்கு பல லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, ஏழை மக்கள் பயன்படுத்தும் ஜீரோ பேலன்ஸ் கணக்கில் 4 முறைக்கு மேல் ரொக்கம் எடுத்தாலே ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கிறது.

மக்கள் பணப் பயன்பாட்டை விட்டுவிட்டதாக ஆட்சியாளர்கள் பகல் கனவு காண்கின்றனர். கிராமப்புற மக்கள் இன்றும் ரொக்கப் பணத்தையே நம்பியுள்ளனர். பொதுமக்களிடம் புழங்கும் ரொக்கப் பணம் 2024-25-ல் 6.5 சதவீதம், 2025-26-ல் 12 சதவீதம், தற்போது 2026-27-ல் 12.9 சதவீதம் என மீண்டும் உயர்ந்து வருகிறது.

உண்மை நிலவரம் இப்படி இருக்க, ஏழை மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கே அபராதம் விதிப்பது அப்பட்டமான பகல் கொள்ளை. ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் இந்த கட்டண உயர்வை மத்திய அரசும், எஸ்பிஐ வங்கி நிர்வாகமும் உடனே திரும்பப் பெற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply