“அறுவடைக்கு முன்பாவது விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பை வழங்குக” – அன்புமணி

Priya
726 Views
2 Min Read

“குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு, 70 நாட்களாகியும் இன்று வரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கான உதவி என்பது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயருக்கு ஆக்சிஜன் வழங்கப்படும் வேகத்தில் அளிக்கப்பட வேண்டும். இதை அரசு உணர்ந்து கொண்டு விவசாயிகளுக்கான குறுவைத் தொகுப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரம், விதைகள் மற்றும் நேரடி உதவி என பல வடிவங்களில் ஏக்கருக்கு ரூ.4,000 கிடைக்கும் வகையில் குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு, 70 நாட்களாகியும் இன்று வரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. மிகவும் நெருக்கடியான காலத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய குறுவைத் தொகுப்பை வழங்குவதில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் இன்று வரை மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், எப்போதும் வழங்கப்படும் குறுவைத் தொகுப்பை விரைந்து வழங்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் தான் கடந்த ஜூன் 12-ம் தேதி குறுவைத் தொகுப்பு வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

குறுவை சாகுபடி தொகுப்பு என்பதே நெற்பயிர்களை நடவு செய்யும் காலத்திலும், அதைத் தொடர்ந்து வரும் சில நாட்களிலும் வழங்கப்பட வேண்டியதாகும். ஆனால், நடவு முடிந்து விரைவில் அறுவடை தொடங்கவுள்ளது. இன்னும் 10 நாள்களில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கொள்முதல் பருவம் தொடங்கவுள்ள நிலையில், இன்று வரை குறுவைத் தொகுப்பு வழங்கப்படாமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

விவசாயிகளுக்கான உதவி என்பது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயருக்கு ஆக்சிஜன் வழங்கப்படும் வேகத்தில் அளிக்கப்பட வேண்டும். இதை அரசு உணர்ந்து கொண்டு விவசாயிகளுக்கான குறுவைத் தொகுப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply