தொடர்ந்து உயரும் தங்கம் விலை…

Priya
1288 Views
2 Min Read

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் இன்று (ஆக.21) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்க விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 17-ல் பவுனுக்கு ரூ. 400, ஆக.18-ல் பவுனுக்கு ரூ.160, ஆக.19-ல் பவுனுக்கு ரூ.880 என்று உயர்ந்த நிலையில் நேற்று (ஆக. 20) தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்தது. அதன் நீட்சியாக இன்று ஆக.21 அன்றும் பவுனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.

இன்றைய விலை விவரம்

இந்தச் சூழலில் சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,710-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,17,680-க்கு விற்பனையாகிறது.

24 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.16,048-க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.12,490-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply