இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தமிழக முதலமைச்சர் விஜய் ஆட்சி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.
சினிமாவிலும் சாதனை, ஆட்சியிலும் சாதனை என முதலமைச்சர் விஜயின் 100 நாள் ஆட்சி குறித்து இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் பாராட்டியுள்ளார். பூந்தமல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கான தொலைநோக்கு பார்வையோடு முதலமைச்சர் செயல்படுவதாகக் கூறினார்.
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. பிரபல சினிமா நடிகரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணன் முன்னிலையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில், புற்றுநோயை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், புற்றுநோய் தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் முறைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் இதில் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தமிழக முதலமைச்சர் விஜய் ஆட்சி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். அதில், சினிமாத்துறைக்கும் நூறு நாட்கள் என்ற மைல்கல்லுக்கும் எப்போதும் மிகநெருங்கியத் தொடர்பு உண்டு என்று குறிப்பிட்ட அவர், திரையுலகில் எண்ணற்ற 100 நாள் வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்த விஜய், தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுத் தனது முதல் 100 நாள் ஆட்சிக் காலத்தையும் எந்தவித விமர்சனங்களும் இன்றி மிகவும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் என்று பெருமிதம் தெரிவித்தார்.

