தெரு, சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்த ஒரு வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தெரு பெயரில் சாதிப் பெயர் இடம்பெற்றிருந்தது இதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, “தெருக்கள், சாலைகளில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என கடந்த 1998-ம் ஆண்டே அரசு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளும் உள்ளன. இருப்பினும், இன்னும் தெருக்களின் பெயர்களில் சாதிப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன” என குறிப்பிட்டார்.
மேலும், ‘‘தெருக்கள், சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளையும், அரசு உத்தரவுகளையும் அமல்படுத்துவதை உறுதி செய்ய இதுவே சரியான நேரம்” என குறிப்பிட்ட நீதிபதி, தெரு பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்து, தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்கும்படி, உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

