சிறப்பாக செயல்பட்ட போலீஸார், பள்ளி, கல்லூரிகளுக்கு விருது: முதல்வர் விஜய் வழங்கினார்

Priya
804 Views
3 Min Read

போதைப்பொருளுக்கு எதிராக மாணவர்கள் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில், போதைப்பொருள் ஒழிப்பு, விழிப்புணர்வு நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர், பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்வர் விஜய் விருதுகளை வழங்கினார்.

தமிழகத்தை போதைப்பொருள்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்கில், தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் பெருந்திரள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

விழிப்புணர்வு பிரச்சாரம்

விழாவுக்கு தலைமை தாங்கிய முதல்வர் விஜய், போதைப்பொருளுக்கு எதிரான உறுதி மொழியை மேடையில் வாசித்தார். அதைத்தொடர்ந்து விழாவில் பங்கேற்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.

அனைத்து மாவட்டங்களிலும் காணொலி மூலம் இணைந்த மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் பள்ளி, கல்லூரிகளில் போதை மற்றும் புகையிலையில்லா வளாகம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

மேலும் செங்கல்பட்டு, கோவை, தஞ்சாவூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்ட நடவடிக்கையையும் காணொலி மூலம் பார்வையிட்டார்.

போலீஸாருக்கு விருது

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு முதல்வர் விஜய் விருது மற்றும் வரைவோலை வழங்கி பாராட்டினார். அதன்படி கடலூர் எஸ்பி விவேகானந்தா சுக்லா, ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ், சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் எஸ்.பி லட்சுமணன் உள்ளிட்ட 15 பேர் விருது பெற்றனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு பரிசு

போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்தை சிறப்பாகச் செயல்படுத்திய பள்ளிகளில் ஈரோடு மாவட்டம் செங்கோடம்பாளை யம் அரசு உயர்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை முதல் 3 இடங்களை பிடித்தன.

அதேபோல், கல்லூரிகளில் திருப்பூர் சிக்கன்னா அரசு கல்லூரி, மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்தன. பள்ளி, கல்லூரிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை முதல்வர் விஜய் வழங்கினார்.

சிறந்த தன்னார்வலர்கள் குழுவை ஏற்படுத்திய பள்ளிகளில் நாமக்கல் பரமத்தி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சென்னை கோவூர் கிருஷ் சர்வ

தேச பள்ளி, ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி, ஆவடி இந்துக்கல்லூரி, ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி ஆகியவற்றுக்கும் வெற்றிச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை முதல்வர் வழங்கினார்.

விழாவில், தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறை செயலர் க.மணிவாசன், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், உயர்கல்வித்துறை செயலர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்திரமோகன், சென்னை ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கொஞ்சி மகிழ்ந்த முதல்வர்

போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக ராமநாதபுரம் எஸ்.பி சந்தீஷ் விருது பெற வந்திருந்தார். அவருடன் வந்த அவரது 4 வயது மகன் சண்முக், போலீஸ் சீருடை அணிந்து மேடைக்கு கீழே நின்று கொண்டிருந்தான்.

அதைக் கவனித்த முதல்வர் விஜய், சிறுவனை மேடைக்கு அழைத்தார். உடனே ஓடிவந்த சிறுவனை தூக்கி கொஞ்சி மகிழ்ந்து அவனுடன் பேசினார். அந்த சிறுவன் எஸ்.பி சந்தீஷின் மகன் என்பதை அறிந்த விஜய், சந்தீஷையும் பாராட்டினார்.

பின்னர் மேடையில் இருந்து விடைபெற்றுச் சென்ற சிறுவனை விஜய் சல்யூட் செய்து வழியனுப்பினார். பதிலுக்கு சிறுவனும் விஜய்க்கு சல்யூட் செய்துவிட்டு அங்கிருந்து சென்றான். இந்நிகழ்வு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply