“ஆய்வு என்ற பெயரில் பட்டாசு தொழிலை நசுக்கப்படுவதைக் கண்டித்து சிவகாசியில் மாபெரும் போராட்டத்தை திமுக முன்னெடுக்கும்” என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பொருளியல் வரைபடத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் விருதுநகர் மாவட்டத்தின் அச்சாணியாகவும், லட்சக்கணக்கான ஏழை எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்வது சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பட்டாசு உற்பத்தித் தொழில்.
ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.6 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் நடக்கும் இத்தொழிலை நம்பி ஏறத்தாழ 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணி செய்கின்றார்கள்.
நமது நாட்டின் மொத்தப் பட்டாசுத் தேவையில் 80 சதவீதத்துக்கு அதிகமாகப் பூர்த்தி செய்து, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்தத் தொழிலும், அதனை நம்பியிருக்கும் மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்களும், தொழிலாளர்களும் இன்று தவெக அரசின் தேவையற்ற கெடுபிடிகளினால் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீதோ, அல்லது பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து, சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீதோ சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை யாரும் தவறு என்று சொல்லப்போவதில்லை. மனித உயிர்களின் பாதுகாப்பும், விதிமுறைகளைப் பின்பற்றுவதும் எப்போதுமே முதன்மையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், அரசின் அனைத்துச் சட்டத்திட்டங்களுக்கும் உட்பட்டு நடைபெற்று வரும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில், ‘அதிரடி ஆய்வு’ என்ற பெயரில் அரசு நிர்வாகமும் அதிகாரிகளும் நடத்தி வரும் அச்சுறுத்தல்களும் கெடுபிடிகளும் கடும் கண்டனத்திற்குரியவை.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் இக்காலகட்டத்தில், பட்டாசு உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கவிருக்கும் நேரத்தில், அதிகாரிகளின் இந்தத் தேவையற்ற அதிரடி சோதனைகள் தொழில்முனைவோரிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தொழிலாளர்கள் அன்றாட ஊதியமிழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்புள்ளாகும் நிலையும் உருவாகியுள்ளது.
எனவே, சட்டப்பூர்வ உரிமம் பெற்று இயங்கும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில் ‘ஆய்வு’ என்ற பெயரில் நடத்தப்படும் அச்சுறுத்தல்களையும், கெடுபிடிகளையும் இந்த தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
பட்டாசுத் தொழிலை முடக்குவதற்குப் பதிலாக, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தொழில்முனைவோருக்குத் தேவையான ஆலோசனைகளையும் பாதுகாப்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கும் அணுகுமுறையை அரசு மேற்கொள்ள வேண்டும்.
உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களையும், விற்பனையாளர்களையும், வணிகப் பெருமக்களையும் அச்சுறுத்தும் போக்கு தொடருமானால், திமுக தலைவர் ஸ்டாலினின் அனுமதி பெற்று, பட்டாசுத் தொழில் உரிமையாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கச் சிவகாசியில் மாபெரும் ஜனநாயக வழியிலான போராட்டத்தை திமுக முன்னெடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

