தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான பாரதிராஜா, கே.பாக்யராஜ் ஆகியோர், சாதனைகளைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில், ‘ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்’ என்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, வரும் 16-ம் தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை, சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்படுகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இதை நடத்துகின்றன. இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஜி.கே.எம். தமிழ்குமரன், நாசர், ஆர்.கே.செல்வமணி, டி.சிவா, கே.எஸ்.ரவிகுமார், லிங்குசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது : தமிழ் திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த பாரதிராஜா, கே.பாக்யராஜ் ஆகியோருக்கு அவரவர் சொந்த ஊரில் மணிமண்டபம் கட்டி, அவர்களின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்படுகிறது. வரும் 16-ம் தேதி நடக்கும் ‘ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி தமிழக முதல்வர் விஜய், அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், சிவராஜ்குமார், ரிஷப் ஷெட்டி, வி.ரவிச்சந்திரன், மம்மூட்டி, மோகன்லால், ஜாக்கி ஷெராப், போனி கபூர் மற்றும் மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், சுரேஷ் கோபி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.
பாரதிராஜா, கே.பாக்யராஜ் ஆகியோரின் திரைப்படங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி இடம்பெறுகிறது. அவர்களின் படங்களில் இருந்து 20 பாடல்களை தேர்வு செய்து, மேடையில் நடன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பாரதிராஜா, கே.பாக்யராஜ் வாழ்க்கையை 10 நிமிடத்தில் குறும் படமாக ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். இந்நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட் பொறுப்பை பார்த்திபன் ஏற்றுள்ளார். இவ்வாறு செல்வமணி கூறினார்.

