நெல்லை, குமரியில் கொட்டிய கனமழை – ஆக.7 வரை மழை பெய்ய வாய்ப்பு

Priya
669 Views
1 Min Read

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும், நாளை மறுதினமும் (ஆக.2, 3) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகம் மற்றும் இதர பகுதிகளில் 7-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் நாளையும், நாளை மறுதினமும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 82 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.

இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 29 செ.மீ., ஊத்தில் 27 செ.மீ., காக்காச்சியில் 19 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் காளிகேசத்தில் 14 செ.மீ., சிற்றாறு, கீரிப்பாறையில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply