மேற்கூரை சூரியமின் திட்டங்களை விரைவுபடுத்த ஒருங்கிணைந்த செயலி அறிமுகப்படுத்தப்படும் என, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு மின்சாரவாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னை ஐஐடி வளாகத்துக்கு நேற்று சென்று பல்வேறு நவீன மின்சார தொழில்நுட்பங்களை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தை இந்தியாவின் முன்னணி பசுமை எரிசக்தி மாநிலமாக மாற்றும் நோக்கில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகத் தரத்திலான மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு மற்றும் பேட்டரி மறுசுழற்சி தொடர்பான விரிவான புதிய கொள்கை ஐஐடி சென்னை நிபுணர்களுடன் இணைந்து விரைவில் வெளியிடப்படும்.
மின்கட்டமைப்பின் தேவையை கருத்தில் கொண்டு, ஆய்வின் அடிப்படையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு வெளிப்படையான மற்றும் அறிவியல் சார்ந்த அனுமதி நடைமுறை செயல்படுத்தப்படும்.
மேற்கூரை சூரியமின் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் புதிய கொள்கை, எளிய அனுமதி நடைமுறை மற்றும் ஒருங்கிணைந்த செயலி அறிமுகப்படுத்தப்படும்.
இதன்மூலம், மானியம், மீட்டர் பொருத்துதல், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஒரே தளத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். தொடர்ந்து தமிழக அரசு இதற்கான அழுத்தத்தை வழங்கும்.
தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்விவகாரத்தில் ஆளுநர் மாளிகை வழிகாட்டுதல் ஏற்புடையதல்ல. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணையை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த தீர்ப்புக்கான நகல் வந்தவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு தன்னிச்சையாக எந்தவித கட்டுமானத்தையும் மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.
கட்டுமானத்தை மேற்கொள்ள எந்தத் தடையும் உச்ச நீதிமன்றம் விதிக்கவில்லை எனக் கூறும் கருத்து தவறானது. விரிவான திட்ட அறிக்கைக்கு மட்டுமே அனுமதித்துள்ளனர்.
எந்த மாதிரியான முயற்சிகள் மேற்கொண்டால் அணைகட்டும் நடவடிக்கையை தடுக்க முடியும் என முதல்வர்
தொடர்ச்சியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

