மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அமைச்சரின் பதிலை திரும்பப் பெறவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

Priya
707 Views
2 Min Read

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அமைச்சரின் பதிலை திரும்பப் பெறவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என மாநிலங்களவையில் மத்திய ஜல்சக்தித்துறை இணை அமைச்சர் அளித்துள்ள பதில், தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநிலங்களவையில், மத்திய ஜல்சக்தித்துறை இணை அமைச்சர், காவிரியின் குறுக்கில், ஒரு கட்டமைப்பைக் கட்டும் முன், கர்நாடகா கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் வெளி்ப்படையாக கூறப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இச்சூழலில், கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்கும் இடையிலான ஆலமட்டி வழக்கில், கீழ்ப்படுகை மாநிலத்தின் ஒப்புதல் முற்றிலும் அவசியமானது என்று உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அதில் “பிற அனைத்து கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலும், மத்திய அரசின் அனுமதியும் இன்றி, கர்நாடக மாநிலம் அந்த உயரம் வரை கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட முடியாது…” என்று மேற்கோளிடப்பட்டுள்ளது.

கீழ்ப்படுகை மாநில நலன்

காவிரி நீர்விவகார நடுவர் மன்றத் தீர்ப்பின் 18-ம் பிரிவு, ஒவ்வொரு மாநிலமும் தனது எல்லைக்குள் நீரை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை, ‘நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு முரண்படாத வகையில்’ மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

நடுவர் மன்றமே பல முக்கிய கோட்பாடுகளை வகுத்துள்ளது. அதன்படி, கேரளத்தின் பாம்பாறு புனல்மின் திட்டத்தில் வெறும் 0.1 டி.எம்.சி. அளவிலான நுகர்வு பயன்பாடு மட்டுமே இருந்த போதிலும், கீழ்ப்பகுதியில் உள்ள பாசனம் பாதிக்கப்படாத வகையில் நீர் வெளியீட்டு அட்டவணையை கேரளமும் தமிழகமும் இணைந்து ஒப்புக்கொள்ள வேண்டும் என நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

இதன்மூலம், கீழ்ப்படுகை மாநிலங்களின் நலன்களை பாதிக்கக்கூடிய நீர் வெளியீடுகளின் ஒருங்கிணைந்த ஒழுங்குபடுத்தலுக்கு நடுவர் மன்றம் முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது தெளிவாகிறது.

மேலும், நடுவர் மன்றத் தீர்ப்பின் 11-ம் பிரிவு, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கிடையே பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டு, ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்படாத வரையில், கீழ்ப்படுகை மாநிலங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நீர் வழங்கலை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் மேல்ப்படுகை மாநிலம் மேற்கொள்ளக் கூடாது என்று குறிப்பாகத் தடை செய்கிறது.

அதேபோல், 20-ம் பிரிவு, நடுவர் மன்றத் தீர்ப்பில் ஏதேனும் மாற்றம், திருத்தம் அல்லது மாற்றியமைப்பு செய்யப்பட வேண்டுமெனில், அது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்பந்தத்தின் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும் என்பதை அங்கீகரிக்கிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் அளித்த பதில் திரும்பப் பெறப்பட வேண்டும். மேகேதாட்டு திட்டத்துக்கு எந்த விதமான சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கப்படக்கூடாது.

நீரின் அளவு மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நீர் வெளியீட்டு முறை ஆகிய இரண்டிலும் கீழ்ப்படுகை மாநிலங்களின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இத்திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு பரிசீலனையும், அனைத்து கீழ்ப்படுகை மாநிலங்களின் பாதகங்களையும் கருத்தில் கொண்டு, முழுமையான தொழில்நுட்ப மற்றும் சட்ட ஆய்வுக்குப் பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும்.

நீதி, கூட்டாட்சி சுமுகநிலை மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின் உண்மையான அமலாக்கம் ஆகியவற்றின் பரந்த நலனைக் கருத்தில் கொண்டு, இதில் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply