வானிலை முன்னறிவிப்பு: ஜூலை 31-ல் கோவை, நீலகிரி, தேனியில் கனமழை வாய்ப்பு

Priya
903 Views
2 Min Read

தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 31, ஆக.1 ஆகிய 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானியும், உயரதிகாரியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லார், புதுக்கோட்டையில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப்பாதை (Trough) நிலவுகிறது.

ஜூலை 28, 29 ஆகிய தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 30-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 31, ஆக.1 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

ஆக.2, 3 ஆகிய தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (ஜூலை 28, 29) ஆகிய நாட்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதி, ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் ஜூலை 30-ம் தேதி வரையும், தென் தமிழக கடலோரப்பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதி, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி, கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஆக.1-ம் தேதி வரையும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply