டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தையை அடுத்து, சிஜேபியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் இதை தெரிவித்தார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய அரசு சார்பில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையை நடத்தினர். சிஜேபி சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், ஆசுதோஷ் ரங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று (ஜூலை 24) நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் எனும் மூன்று கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சிஜேபி பிரதிநிதிகள் மத்திய அமைச்சர்களிடம் அளித்தனர்.
அப்போது, கடைசி இரண்டு கோரிக்கைகளை கொள்கை ரீதியாக ஏற்பதாகவும், முதல் கோரிக்கை விஷயத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் ஜே.பி. நட்டா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்ட உடன்பாட்டுக்கு இணங்க, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சிஜேபியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆசுதோஷ் ரங்கா, “நாங்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தோம். தற்போது தர்மேந்திர பிரதான் பதவி விலகி உள்ளார். இதன்மூலம், எங்கள் முதல் கோரிக்கை நிறைவேறி உள்ளது. இழப்பீட்டைப் பொறுத்தவரை, நடைமுறையில் உள்ள விதிகளுக்கு உட்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கவுரவமான இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
வழக்குகளை திரும்பப் பெறும் விவகாரத்தைப் பொறுத்தவரை, அதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது. மூன்று முதல் நான்கு நாட்களில் முதல் தகவல் அறிக்கைகளின் நகல்களை பகிர்ந்து கொள்வதாக அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
இதை புரிந்துகொண்டு நாங்கள் அரசாங்கத்திடம் எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை அளித்துள்ளோம். தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக நாங்கள் அளித்த ஐந்து அம்ச சீர்திருத்த யோசனைகள் தொடர்பாக நான்கு வாரங்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் அரசாங்கத்தைச் சந்திப்போம்” என தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சவுரவ் தாஸ், “ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், நல்லெண்ணத்தின் பேரில் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக சிஜேபி அறிவிக்கிறது” என தெரிவித்தார்.
இதன்மூலம், சுமார் ஒரு மாத காலமாக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

