அரசு அலுவலகங்களில் யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் அதிகளவு லஞ்சம் பெறுவது லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனைகளில் தெரியவந்துள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் லஞ்சப் பரிவர்த்தனையின் வடிவம் காலத்துக்கேற்ப மாறி வருகிறது. ஒருகாலத்தில் மேஜைக்குக் கீழே ரொக்கமாக கைமாறிய பணம், தற்போது ஜி-பே, போன்பே, பேடிஎம் என யுபிஐ செயலிகள் வழியாக பரிமாறப்படுவது, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அண்மைய சோதனைகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறிப்பாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் நடந்த சோதனைகளில், ரொக்கத்தைவிட டிஜிட்டல் பரிவர்த்தனைகளே முக்கிய ஆதாரங்களாக மாறியுள்ளன. தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் 4-ம் தேதி 46 சார்-பதிவாளர் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.37.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 18-ம் தேதி மாநிலம் முழுவதும் 40 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.) சோதனை நடத்தப்பட்டது. இதில், ரூ.37.81 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. அதைவிட முக்கியமாக, ஜி-பே உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனைகள் மூலமாக சுமார் ரூ.6 லட்சம் வரை கைமாறியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
மூன்றாவது கட்டமாக, கடந்த 17-ம் தேதி 35 தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.82.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஜி-பே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாக மட்டும் ரூ.68 லட்சத்து 32,582 கைமாறியிருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, “டிஜிட்டல் பரிவர்த்தனை பாதுகாப்பானது. இந்த வகையில் லஞ்சம் பெற்றால் கண்டுபிடிக்க முடியாது என்ற தவறான நம்பிக்கை சிலரிடம் உள்ளது. ஆனால், யுபிஐ பரிவர்த்தனைகள் ஒவ்வொன்றுக்கும் தேதி, நேரம், தொகை, அனுப்பியவர், பெற்றவர், வங்கி விவரங்கள் என முழுமையான டிஜிட்டல் தடயங்கள் இருக்கும். செல்போன்கள், வங்கி கணக்குகள் மற்றும் பரிவர்த்தனை வரலாறுகளை ஆய்வு செய்வதன் மூலம், பணம் எந்த வழியில் யாரிடம் சென்றது என்பதை எளிதாகக் கண்டறிய முடிகிறது” என்றனர்.
சிலர் தங்கள் சொந்த வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தாமல், உறவினர்கள் அல்லது நண்பர்களின் யுபிஐ கணக்குகளை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், பணத்தின் பரிமாற்றச் சங்கிலியை முழுமையாக ஆய்வு செய்யும் தொழில்நுட்ப வசதிகள் தற்போது விசாரணை அமைப்புகளிடம் இருப்பதால், இத்தகைய பரிவர்த்தனைகளும் விரைவில் வெளிப்பட்டு விடும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தற்போது எளிமையாகியுள்ள நிலையில், அதே தொழில்நுட்பத்தை ஊழலுக்குப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. ஆனால், அந்த டிஜிட்டல் தடங்களே தற்போது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முக்கிய ஆதாரங்களாக மாறியுள்ளன.

