முன்னாள் முதல்வர் காமராஜரின் 124-வது பிறந்தநாள்விழா நேற்று தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணா சாலையில் பல்லவன் இல்லம் எதிரே அமைந்துள்ள காமராஜர் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, டாக்டர் கோ.க. அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், ப. வெங்கடரமணன், ராஜ்மோகன், ஏ.எம். ஷாஜகான், நெ. மரிய வில்சன், முனைவர் ரா. குமார், மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் திரளாகப் பங்கேற்றனர்.
திமுக சார்பில், அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு அக்கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபுவும், அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திராவும், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, தமாகா தலைவர் ஜி.கே. வாசன், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.தமிழக காங்கிரஸ் சார்பில், சத்தியமூர்த்திபவனில் 124 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது.
இதேபோல், முக்கிய தலைவர்கள் வெளியிட்டுள்ள புகழஞ்சலியில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடி: நாட்டைக் கட்டமைக்கத் தமது வாழ்வையே அர்ப்பணித்த இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவரான காமராஜரை நினைவுகூர்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி: விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக நீதி, கொண்ட பொதுச்சேவைக்காகவும் வாழ்ந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்.
Advertisement
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்: காமராஜரின் முன்னோடி திட்டமான மதிய உணவுத் திட்டம் லட்சக்கணக்கான குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு வந்து சமூக சமத்துவத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்தது.
முதல்வர் விஜய்: வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதையின் தியாகத்தையும், சாதனைகளையும் போற்றி எனது கல்வி வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்: கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்தவர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தமிழகத்தின் கல்விக்கண் திறந்த கர்மவீரர், அணைகள் பல தந்து வேளாண்மை செழிக்க வித்திட்டவர். இதேபோல், வி த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

