அறிமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ் நாராயணன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘லவ் ஓ லவ்’. நாக துர்கா, செல்வராகவன், கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஸினிமா மீடியா சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து உருவாக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் கலைப்புலி தாணு, சித்ரா லட்சுமணன், இயக்குநர்கள் சசி, ஆர்.வி. உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “‘லவ் ஓ லவ்’ என்ற பெயருக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த கதையை ஒன்றரை மணி நேரம் சொன்னார் இயக்குநர். கேட்கும் போது படத்தை நேரில் பார்ப்பது போல் இருந்தது. தயாரிப்பாளர் தனஞ்செயன் வாயால் நல்ல பெயர் எடுப்பது கஷ்டம். அதை இந்த படத்தின் இயக்குநர் மகேஷ் வாங்கியிருக்கிறார். அன்று படம் வெளியாவது தயாரிப்பாளர் கட்டுப்பாட்டில் இருந்தது, பிறகு நடிகரிடம் இருந்தது.
இப்போது ஓடிடி-யிடம் இருக்கிறது. 200 படங்களை இலவசமாகக் கொடுத்தால் கூட ஓடிடி-யில் வாங்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. வாரந்தோறும் 50 படங்களாவது ஓடிடி-யில் வெளியானால் நன்றாக இருக்கும். ரஜினியிடம் இருக்கும் தன்னம்பிக்கை முதல் படத்திலேயே தனுஷுக்கு இருந்தது. அதே நம்பிக்கையை இந்தப் படத்தின் ஹீரோ பவிஷிடம் பார்க்க முடிகிறது” என்றார்.

