மதுரையில் தூய்மைப் பணியாளர்கள் ஸ்டிரைக்: மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

Priya
25 Views
2 Min Read

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குப்பை வாகனங்கள் பணிக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டதால் நகர் முழுவதும் குப்பைகள் தேக்கமடைந்தன.

மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தப்பட்ச ஊதிய அரசாணையின்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தூய்மைப் பணியில் தனியார்மயத்தை கைவிட வேண்டும், அவர்லேண்ட் நிறுவனம் தொழிலார்களுக்கு குறைத்து வழங்கிய நான்கு மாத ஊதியத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) சார்பில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.

500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், பொறியியல் பிரிவு தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்துவிட்டு மைய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தால் வாகன ஓட்டிகள் செல்லூர் வாகன காப்பத்தில் இருந்து குப்பைகளை எடுக்கவில்லை. வாகனங்கள் செல்லாததால், மாநகர் முழுவதும் தேங்கிய குப்பைகளை உரக்கிடங்கிற்கு கொண்டு செல்ல முடியவில்லை.

சிஐடியு மாநகராட்சி பணியாளர்கள் சங்க பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘‘புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, இரண்டு நாட்களுக்கு முன் 12 மாநகராட்சிகளில் தூய்மைப்பணியை மீண்டும் தனியாருக்கு வழங்க ஆலோசனை செய்து டெண்டர் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை சிஐடியு முற்றிலும் நிராகரிக்கிறது.

தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் எல்லாவற்றிலும் முந்தைய திமுக அரசை போல் இல்லாமல் மாற்றத்தை தரக்கூடிய அரசாக செயல்படுவோம் என்று கூறிதான் ஆட்சியை பிடித்துள்ளனர். அந்த மாற்றம் வெளிப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

தூய்மைப் பணியை டெண்டர் எடுக்கும் நிறுவனம், தொழிலார்களையும், வாகனங்களையும் மட்டும் வழங்குகிறார்கள். மற்றபடி மாநகராட்சி பணிமனை, வார்டு அலுவலகங்கள், குப்பை கொட்டும் இடங்கள் போன்ற அரசு உள்கட்டசமைப்புகளை பயன்படுத்தியே தூய்மைப் பணி மேற்கொள்கின்றனர். அரசே, இந்த தூய்மைப் பணியை செய்யலாமே.

ஜூன் மாதத்தோடு தனியார் நிறுவனத்தின் தூய்மைப் பணி ஒப்பந்தம் நிறைவு பெறுகிறது. ஆனால், தூய்மைப் பணி விவகாரத்தில் கடந்த திமுக அரசு செய்த தவறைதான் தவெக அரசு செய்ய உள்ளதாக பணியாளர்களிடையே அச்சத்தையும், சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதன்பிறகு தொழிலாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் குவிக்கப்பட்டு அவர்கள் ஆணையாளர் அலுவலகத்தை நோக்கி செல்வதை தடுத்து நிறுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply