விரைவில் முழுவீச்சில் வைகை அணையை தூர்வாரும் பணி: அமைச்சர் நிர்மல்குமார்

Priya
12 Views
2 Min Read

இரண்டு மாதத்துக்குள் வைகை அணையை தூர்வாரும் பணி முழுவீச்சில் தொடங்கும் என்று ஆய்வுக்குப் பின் அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.

போதுமான மழை இல்லாததால் கடந்த சில மாதங்களாக வைகை அணையின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது. மேலும் பாசன நீர், குடிநீருக்காக நீர் தொடர்ந்து திறக்கப்பட்டதால் கடந்த மாதம் 20 அடியாக சரிந்தது. ஏற்கெனவே நீருக்குள் 15 அடிக்கும் மேல் வண்டல் மண்படிவு உள்ள நிலையில் உண்மையான நீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் சென்றது. இதனால் குடிநீர் திட்டங்கள் முழுமையாக செயலிழந்தன. இதுவரை நீரில் மூழ்கி இருந்த வண்டல்மண் படிமங்கள் வெளியில் தெரிய தொடங்கின.

அணை வறண்டது ஒருவகையில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அணைப்பகுதியை எளிமையான முறையில் தூர்வாரிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆகவே விவசாயிகள், சங்க பிரதிநிதிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் அணையை தூர்வார தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 13) தேனி மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார் அணைப் பகுதியை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அணையில் சுமார் 15 அடி வரை தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றி, தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்கான ஆய்வு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தூர்வாரும் பணி 3 கட்டங்களாக கொள்ள ஏறத்தாழ 9ஆண்டுகள் ஆகும். இது தொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெற இரண்டு நாட்களுக்கு முன்பே தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் வைகை அணையை தூர்வாரும் பணி முழுவீச்சில் நடைபெறும்.

மேலும், விவசாயிகள் தங்கள் தேவைகளுக்காக வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது ஆனால் வணிக ரீதியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ கடத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் ஆண்டிபட்டி புறவழிச்சாலை திட்டமும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply