தவெக ஆட்சி கவிழும் என ஸ்டாலின் கூறியிருக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது திமுக கூட்டணியில் நாங்கள் அங்கம் வைத்துள்ளோம்.
நாளை உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல் வரும்போது, கூட்டணியில் தொடர்வது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடி முடிவு எடுப்போம். திமுக கூட்டணி கட்சியினர் தற்போது தவெகவில் அமைச்சராக உள்ளனர். இதனால் தற்போது கூட்டணி இல்லாத நிலை உள்ளது.
தவெக ஆட்சி கவிழும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கக் கூடாது. திமுக கூட்டணியில் நாங்கள் இருப்பது குறித்து கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பிறகு முறையான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம். தேசிய நலன் கருதி இண்டியா கூட்டணியில் திமுக இருக்க வேண்டும்.

