“மின்துறையில் நடந்தது ஹார்டு டிஸ்க் திருட்டு மட்டுமல்ல. தரவுகள் திருடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. இதில் நியாயமான விசாரணை நடத்தி உண்மை வெளிவர வேண்டும் எனில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என அதிமுக கோரியுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மின்துறையில் ஹார்டு டிஸ்க் திருடு போன வழக்கை ஏன் சிபிசிஐடி- யிடம் ஒப்படைக்கவில்லை என நாம் 3 நாட்கள் முன்பு கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது மிகவும் தாமதமாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்ட்டுள்ளது.
இதற்கு எதற்கு இத்தனை நாட்கள்?. திருடு போன முதல் நாளே செய்ய வேண்டிய வேலையை ஏறத்தாழ ஒரு வாரம் தாமதம் செய்துள்ளதன் பின்னணி என்ன?. செய்திகளில் வரும் வரை இதுபற்றி அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் தராமல் மறைத்து வைத்திருந்ததே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது வெறும் ஹார்டு டிஸ்க் திருட்டு மட்டுமல்ல. தரவுகள் திருடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. தரவுகள் திருட்டு பற்றி உங்கள் அரசின் காவல்துறையே விசாரிப்பதை இனிமேல் எப்படி நம்ப முடியும்?. நியாயமான விசாரணை நடத்தி உண்மை வெளிவர வேண்டும் எனில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரியபடி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

