சேலம்: சேலம் மாவட்டத்தில் திமுக பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021ல் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் என்று அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்தார். சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கான பொறுப்பு அமைச்சராக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் திமுக 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒருகாலத்தில் திமுகவுக்கு பலமாக இருந்த சேலம், இப்போது அதிமுகவின் கோட்டை ஆகி இருப்பதால் அதனைத் தகர்க்கும் நோக்கத்துடன் கே.என்.நேருவை சேலத்துக்கு அனுப்பினார் ஸ்டாலின்.
அப்போது முதல் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்திற்குச் சென்று அரசு நிகழ்வுகளில் பங்கேற்பது, கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பது, பொதுக்கூட்டங்களை நடத்துவது என தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் கே.என்.நேரு. சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் திமுக இளைஞரணி மாநாட்டை பிரமாண்டமாக ஏற்பாடு செய்து நடத்திக் காட்டினார் கே.என்.நேரு. சேலம் மாவட்ட திமுக, கேஎன் நேரு சொல்படியே இயங்கி வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மார்ச் 1ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகில் 17வது வார்டு சார்பாக வாழ்த்து பேனர் வைக்கப்பட்டது. முதலமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின், அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், சேலம் மாவட்ட பொறுப்ப்ய் அமைச்சர் கே.என்.நேரு, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரின் படங்களுடன் இந்த பேனர் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் அந்த பேனரில் இருந்த அமைச்சர் கே.என்.நேரு புகைப்படம், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் புகைப்படம் உட்பட அனைத்து புகைப்படங்களையும் கிழித்து சாலையில் எறிந்துள்ளனர். சேலம் தம்மம்பட்டியில் பட்டப்பகலில் ஆளுங்கட்சி பேனர் கிழக்கப்பட்டது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தம்மம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.