சென்னை: சென்னை மற்றும் கோவையில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து பள்ளியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை போரூர் அடுத்த மாங்காடு செருகம்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு வழக்கம் போல் இன்று மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், இந்த பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், போலீசார் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் பள்ளியில் வந்து சோதனையிட்டு வருகின்றனர். இதேபோல் மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டு வெடிகுண்டு இருக்கிறதா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர். முன்னதாக பள்ளிக்கு வந்திருந்த மாணவ மாணவிகளை பாதுகாப்பு கருதி வெளியே அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து போலீசார் பள்ளி வளாகம், பள்ளிக்கூட பஸ்கள், வறாண்டாக்கள் என பள்ளி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கும் நேற்று நள்ளிரவில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் இரவே போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் நேற்று நள்ளிரவில் இருந்து போலீசார் பள்ளியில் சோதனை செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒரு மின்னஞ்சல் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது. எனினும் யார் இந்த மிரட்டலை விடுத்தது என்பது இது வரை போலீசர் கண்டுபிடிக்கவில்லை. இந்த நிலையில், இரண்டாவது முறையாக இன்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் பெற்றோர்கள் அதிச்சியடைந்துள்ளனர்