தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் திமுக எம்.எல்.ஏ அலுவலகத்தை நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி நேற்று (01-06-26) திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்று இருக்கக்கூடியவர்கள் எப்படிப்பட்ட ஆட்சி நடத்துவார்கள் என்று உங்களுக்கு தெரியும் ஆட்சி பொறுப்பேற்று கொண்டு 23 நாட்கள் கடந்துவிட்டது. தமிழகத்தில் இந்த 23 நாட்களிலே 64 கொலை சம்பவங்கள் நடந்திருக்கிறது, 111 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கிறது. அதில் 61 குழந்தைகளுக்கு எதிரானது. இன்றைக்கு கூட பெண்களுக்கு எதிரான ரெண்டு குற்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. இப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கக்கூடிய நேரத்தில் ஆட்சி பொறுப்பேற்று இருக்கக் கூடியவர்கள் அந்த பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என்பதை பற்றி கவலைப்பட வேண்டும்.
நாங்க ஆட்சி பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டில் இல்லை. இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்தது. ஆனால் இன்று பெண்களுடைய பாதுகாப்பு ஒவ்வொரு நாளும் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் பொறுப்போடு அவர்கள் இந்த பிரச்சனையை கலைவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இதற்கான தீர்வுகளை தேட வேண்டும். சட்டம் ஒழுங்கை சரி செய்ய முயற்சிகள் எடுக்க வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு மறுபடியும் மறுபடியும் வேறு யார் மீது பழி போடலாம் என்று அவர்கள் காரணங்களை தேடிக் கொண்டிருந்தால் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் அதிக நாள் பொறுமையாக காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதேபோல விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.
ஆனால் சென்ற ஆண்டே ரிசர்வ் பேங்க் தெளிவாக அதற்கான சட்ட திட்டங்களை தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தார்கள். எப்படி நீங்க கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய முடியுமா? முடியாதா? என்று அதற்கான வழிவகைகளை எல்லாம் எடுத்துச் சொல்லியிருந்தார்கள். யாரையாவது குறை சொல்லிக்கொண்டு அவர்கள் மீது பழியை போட்டுவிட்டு ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் பொறுப்பை தட்டி கழிக்கக் கூடாது. எதிர்கட்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். உங்களுக்கு அவகாசம் தருகிறோம். ஆனால் தவறு இருந்தால் போராடவும் சுட்டிக்காட்டவும் எந்த காலத்திலும் திராவிட முன்னேற்ற கழகம் தவறாது” என்று கூறினார்.

