தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத் தாமதம் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மாதம் ரூ.2,500 தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது நடைமுறையில் உள்ள ரூ.1,000-ஐயும் வழங்காமல் இழுத்தடிப்பதுதான் நீங்கள் கொண்டு வந்த மாற்றமா? என்று முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு மேற்கொண்டுள்ள இந்தத் திடீர் தாமதம் மற்றும் ‘மறுசீரமைப்பு’ என்ற சொல்லாடல், மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்டாலின் தனது கண்டனத்தை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், இப்போது எதற்காக இந்தத் தாமதம்? என்று வினவியுள்ளார். ஏற்கனவே செம்மையாகச் செயல்பட்டு வரும் ஒரு திட்டத்தைத் தொடர இப்போது எதற்கு அவகாசம் தேவைப்படுகிறது? என்று கேட்டுள்ள அவர், எந்த மாதிரியான மறுசீரமைப்பைச் செய்யப் போகிறீர்கள்? என்று முதலமைச்சரை நேரிடையாகச் சாடியுள்ளார். எதிர்க்கட்சிகளின் குரலாகவும், மக்களின் ஆதங்கமாகவும் இந்த கண்டனத்தை கருத்துகளை அவர் பதிவு செய்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தில், “ஏற்கனவே தகுதியுள்ள பயனாளிகள் கண்டறியப்பட்டு, மாதந்தோறும் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், திடீரென ‘மறுசீரமைப்பு’ என்ற பெயரில் பயனாளிகளை அலைக்கழிப்பது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் அன்றாடத் தேவைகளுக்காகவும், குறிப்பாகப் பெண்களின் பொருளாதார விடுதலைக்காகவும் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், எந்தக் காரணத்தைக் கொண்டும் முடக்கப்படக் கூடாது என்பதே ஒட்டுமொத்தப் பெண்களின் எதிர்பார்ப்பு. இந்தத் தாமதம் அரசு மீதான நம்பிக்கையைக் குலைக்கும் என்பதால், கண்டனத்தை தெரிவித்த அவர், உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் நேரடி உத்தரவின் பேரில் இந்த மறுசீரமைப்பு பணிகள் நடப்பதாக அரசு கூறியுள்ள நிலையில், திமுக தலைவரின் இந்தத் தீவிரமான கண்டன கருத்து, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் விளக்கம் போதுமானதாக இல்லை என்று கருதும் எதிர்க்கட்சிகள், மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தை ஒரு மக்கள் போராட்டமாக மாற்றத் தயாராகி வருகின்றன. அரசு தனது முடிவைத் திரும்பப் பெற்று, தடையின்றித் தொகையை வழங்க முன்வருமா என்பதே தற்போது அனைவரது கவனமும் ஈர்த்துள்ள விஷயமாகும். திட்டத்தின் தார்மீகப் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்டாலினின் இந்தக் கண்டனம் அமைந்துள்ளது.

