தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கத் தமிழக வெற்றி கழகம் (தவெக) தீவிரமாக முயன்று வரும் நிலையில், அக்கட்சி மீது எழுந்துள்ள ‘குதிரைபேர’ புகார்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தனது எக்ஸ் (X) தளத்தில் தவெக-வை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வில்சனின் விமர்சனம்:
டி.டி.வி. தினகரனின் குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி வில்சன் பதிவிட்டுள்ள கருத்தில், “தமிழக அரசியலில் தாங்கள் ‘மாற்றத்தைக்’ கொண்டு வரப்போவதாக தவெக கூறியது. அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதை இப்போது நான் புரிந்து கொண்டேன். கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகம் இத்தகைய ‘குதிரை பேரம்’ முயற்சிகளைப் பார்த்ததே இல்லை! இவையெல்லாம், அவர்கள் இன்னும் பொறுப்பேற்பதற்கு முன்பே நடக்கின்றன!” என்று சாடியுள்ளார்.
டி.டி.வி. தினகரனின் குற்றச்சாட்டு:
முன்னதாக, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஒரு பகீர் புகாரை முன்வைத்திருந்தார். அதில், “அமமுக எம்.எல்.ஏ காமராஜ் பெயரில் தவெக தரப்பினர் ஆளுநரிடம் போலி ஆதரவு கடிதத்தைக் கொடுத்துள்ளனர். ஆட்சி அமைத்தே தீர வேண்டும் என்ற பதவி வெறியில் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அரசியல் பரபரப்பு:
தவெக 108 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் தேவைப்பட்டன. தற்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் 117 இடங்கள் வரை பலம் கூடியுள்ளது. எனினும், ஒரு சில இடங்களுக்காகத் தவெக மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, அக்கட்சியின் “தூய்மையான அரசியல்” என்ற பிம்பத்திற்குச் சவாலாக மாறியுள்ளது. இது குறித்து தவெக தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை.

