தொடர்ந்து 2வது நிதி ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது நம் தமிழ்நாடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

Priya
5 Views
1 Min Read

தமிழகப் பொருளாதாரம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டுள்ளதைத் தொடர்ந்து, மாநில நிதி மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். 2024-25 நிதியாண்டில் 11.19% வளர்ச்சியையும், 2025-26 நிதியாண்டில் 10.83% வளர்ச்சியையும் தமிழ்நாடு பதிவு செய்துள்ளதாக ஒன்றிய அரசின் தரவுகள் வெளியான நிலையில், இது தமிழகத்தின் தொழில் வலிமையை உலகிற்குப் பறைசாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த அபார வளர்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், அயராத உழைப்புமே முக்கியக் காரணம் எனப் பாராட்டியுள்ளார். “எந்தத் தடையையும் தகர்த்து, தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக நிலைநிறுத்தி வரும் முதல்வரின் கனவுகள் இன்று நனவாகி வருகின்றன” என அவர் பதிவிட்டுள்ளார்.

தொழில் வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் துல்லியமான திட்டமிடல் ஆகியவற்றின் காரணமாகவே தமிழ்நாடு இந்தச் சிகரத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ‘திராவிட மாடல் 2.0’ நிர்வாகத்தின் கீழ் மாநிலம் இன்னும் பல வரலாற்றுச் சாதனைகளைப் புரியும் எனத் தன்னம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு காட்டி வரும் வேகம், மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இரட்டை இலக்க வளர்ச்சியானது, 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கான பாதையில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply