சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’, அடிப்படை வசதிகளின்றி வாழும் கிராம மக்களின் வாழ்க்கையையும், கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் அவலங்களையும் இணைத்து சொல்லும் படம்.
சாலை வசதி கூட இல்லாத மலைக்கிராமத்தில் நுங்கு வியாபாரம் செய்து வாழும் செல்வராகவன், குஷி ரவியை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார். மனைவிக்காக கடன் வாங்கி உணவகம் தொடங்கும் அவர் வாழ்க்கை, எதிர்பாராத சோகங்களால் சிதறுகிறது. மனைவியின் தற்கொலையின் பின்னணி உண்மையை அறிந்த பிறகு, ஒரு சாதாரண மனிதன் எடுக்கும் முடிவுகள் அவரை எப்படி “தெய்வம்” என பார்க்க வைக்கிறது என்பதே படத்தின் மையம்.
நாயகனாக நடித்துள்ள செல்வராகவன், மிக எளிமையான மனிதனின் குணநலன்களை இயல்பாக வெளிப்படுத்த முயற்சித்தாலும், பல இடங்களில் அவரது நடிப்பு மந்தமாகவும், உணர்ச்சி வெளிப்பாடு குறைவாகவும் தோன்றுகிறது. குறிப்பாக முக்கியமான காட்சிகளில் கூட அவர் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், கிளைமாக்ஸ் பகுதிகளில் வரும் அவரது மாற்றம் கவனிக்கத்தக்கது.
நாயகியாக நடித்துள்ள குஷி ரவி, அழகிலும் நடிப்பிலும் கவர்ச்சி ஏற்படுத்தி, கணவன்-மனைவி பாசக் காட்சிகளில் சிறப்பாகத் திகழ்கிறார்.
மைம் கோபி வில்லனாக வெறுப்பை தூண்டும் விதத்தில் நடித்திருப்பது பலம்.
கெளசல்யா, ஆர்.எஸ்.சதீஷ் உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பை நியாயமாக செய்துள்ளனர். ஒய்.ஜி.மகேந்திரனின் நடிப்பில் செயற்கைத்தனம் தெரிகிறது.
இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் எடுத்துள்ள கரு பாராட்டத்தக்கது. சாலை வசதி இல்லாததால் மக்கள் சந்திக்கும் சிரமங்கள் மற்றும் கந்துவட்டி கொடுமைகளை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். ஆனால், இந்த பிரச்சனைகளுக்கான தீர்வாக வன்முறையை முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக தோன்றுகிறது.
திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்வதும், சில இடங்களில் நாடகத்தன்மை அதிகமாக இருப்பதும் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதே சமயம், கதாபாத்திரங்களின் உணர்வுகளை நிதானமாக பதிவு செய்திருப்பது ஒரு பலம். ரவி வர்மாவின் ஒளிப்பதிவு கிராமத்து சூழலை உணர்த்த, ஏ.கே.பிரியனின் இசை காட்சிகளுக்கு துணை நிற்கிறது.
மொத்தத்தில், நல்ல கருத்துடன் உருவான இந்த படம், அதன் சொல்லாக்கத்தில் சற்று தடுமாறினாலும், சில உணர்வுப்பூர்வமான தருணங்களால் நினைவில் நிற்கிறது.

