ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில், கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், சோமிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நீளிரா’.
இந்தப் படத்தில், நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, கே இசையமைத்திருக்கிறார்.
ஏப்ரல் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தை அறிமுகப்படுத்தும் வகையில், பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், “மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல வகையான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். எனக்கு மட்டுமல்ல இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த திரைப்படம் ஸ்பெஷலானது. இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளும் எனக்கு பிடித்திருந்தது. மேடைக் கலைஞர்கள், குறும்படங்களில் நடித்தவர்கள், புது முகங்கள், லண்டன், கனடா ஆகிய இடங்களில் இருந்து நடிக்க வந்தவர்கள்… இவர்களுடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது.
இந்த படத்தில் நான் ஒரு கேப்டனாக நடித்திருக்கிறேன். இதைத்தவிர என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி விரிவாக எதையும் சொல்ல இயலாது. ஆனால் படம் பார்த்தால் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்திற்காக அஸ்ஸாம், மும்பை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நடிகர்களை கவனமுடன் இயக்குநர் தேர்வு செய்தார்.

படப்பிடிப்பின் போது நடிகர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை.. சந்தோஷமாக இருந்தது. நான் இதுவரை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தில் ஐந்து படங்களில் நடித்து விட்டேன். அது என்னுடைய சொந்த பட தயாரிப்பு நிறுவனம் போன்றது. இங்கு என்ன சிறப்பு என்றால், இங்கு சமத்துவம் இருக்கும். அனைவரும் சினிமா மீது பற்று கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதிலும் அர்த்தமுள்ள படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
நான் நடித்த காட்சிகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நிச்சயமாக பார்ப்பார், அப்போது நான் நன்றாக நடித்திருக்கிறேனா? இல்லையா? என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
திரைப்படங்கள், இணைய தொடர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் தொடர்பு கொண்டு இப்படத்தின் கதையை பற்றி விவரித்தார். இயக்குநர் சோமிதரனிடம் கதையை கேட்கிறேன் என்று சொன்னேன். கதையைக் கேட்ட பிறகுதான் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானத்தின் கதை தேர்வு குறித்து வியந்தேன். அவர் சரியான கதையை தேர்வு செய்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

