இந்தியாவில் சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டச் செயலிக்கு எதிராக ஒன்றிய அரசு தனது கிடுக்கிப்பிடி நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள் மற்றும் Betting Apps ஆகியவற்றை முடக்கி ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தைச் சூதாட்டங்களில் இழப்பதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதச் செயலிகளுக்குத் தடை
மத்தியப் புலனாய்வு அமைப்புகள் மற்றும் ஐடி அமைச்சகத்தின் சைபர் கிரைம் பிரிவு இணைந்து மேற்கொண்ட ஆய்வில், பல செயலிகள் வெளிநாடுகளில் இருந்து இயங்கி வருவதும், இந்தியப் பயனாளர்களின் பணத்தைச் சட்டவிரோதப் பரிமாற்றங்கள் மூலம் கடத்துவதும் கண்டறியப்பட்டது. குறிப்பாக, ‘ஆன்லைன் விளையாட்டுச் சட்டம்’ (Online Gaming Rules) அமலுக்கு வந்த பிறகு, இத்தகைய தளங்கள் மீதான கண்காணிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தச் சட்டத்தின் கீழ் மொத்தம் 8,400 சட்டவிரோத இணையதளங்கள் மற்றும் Betting Apps முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு
தடை செய்யப்பட்ட இந்தத் தளங்களில் பல, கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களை ஈர்த்து, இறுதியில் பண மோசடியில் ஈடுபடுவதாகப் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி (Money Laundering) புகார்களும் இந்த நிறுவனங்கள் மீது எழுந்துள்ளன. “எந்தவொரு அங்கீகரிக்கப்படாத சூதாட்ட மற்றும் Betting Apps-களை மக்கள் பயன்படுத்த வேண்டாம்; இது போன்ற விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம்” என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடரும் கண்காணிப்பு
ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற தளங்களில் இருந்து இத்தகைய சட்டவிரோதச் செயலிகளை நீக்கத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும், சமூக வலைதளங்களில் உலவும் சூதாட்ட விளம்பரங்களைக் கண்காணிக்கத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடும் அனைத்து Betting Apps-களும் முழுமையாக முடக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

