உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி!!

Priya
30 Views
2 Min Read

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கம் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனைச் சமாளிக்கும் வகையில், அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளில் இருந்து 30 நாட்களுக்குத் தற்காலிகத் தளர்வு அளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

140 மில்லியன் பேரல் எண்ணெய் சந்தைக்கு வரும்

அமெரிக்காவின் இந்தத் தற்காலிக அனுமதியால், தற்போது சர்வதேசக் கடல் பகுதிகளில் கப்பல்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் 140 மில்லியன் பேரல் Iran கச்சா எண்ணெய் உலகச் சந்தைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், “ஈரானுக்கு எதிராக எங்களது ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) தொடரும் அதே வேளையில், ஈரானின் எண்ணெயைப் பயன்படுத்தியே அந்நாட்டிற்கு எதிராக விலையைக் குறைக்கும் உத்தியை நாங்கள் கையாண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி

இந்த 30 நாள் தளர்வானது (Sanctions Waiver) மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை மட்டுமே அமலில் இருக்கும். மேலும், இது புதிய உற்பத்தி அல்லது புதிய கொள்முதலுக்குப் பொருந்தாது. ஏற்கெனவே கப்பல்களில் ஏற்றப்பட்டு, பயணத்தில் இருக்கும் Iran கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை ஈரான் எளிதில் அணுக முடியாதபடி கடுமையான நிபந்தனைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

இந்தியாவிற்கு ஏற்படும் நன்மைகள்

இந்தியாவில் அண்மைக் காலமாகத் தொழில்துறை எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவு சற்று நிம்மதியை அளித்துள்ளது. 140 மில்லியன் பேரல் எண்ணெய் சந்தைக்கு வரும்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்குக் கீழ் குறைய வாய்ப்புள்ளது. இது இந்தியாவின் பணவீக்கத்தைக் குறைக்கவும், பெட்ரோல், டீசல் விலையைச் சீராக வைத்திருக்கவும் உதவும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply