பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

Priya
1 View
1 Min Read

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையிலான அரசியல் மோதல் தற்போது நீதிமன்றப் படிகளில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. பாமகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்த அன்புமணிக்குத் தடை விதிக்கக் கோரி ராமதாஸ் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் (City Civil Court) ஒரு உரிமையியல் வழக்கைத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் என்ற பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனின் கோரிக்கையைச் சிவில் நீதிமன்றம் ஏற்காததால், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி, மார்ச் 12-ஆம் தேதி அன்று சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்தத் தடையை நீக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (மார்ச் 17, 2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “தேர்தல் ஆணையம் அன்புமணியைப் பாமக தலைவராக அங்கீகரித்துள்ளதுடன், மாம்பழம் சின்னத்தை அவருக்கு ஒதுக்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது” என வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் உடனடியாகத் தலையிடுவது சரியாக இருக்காது எனக் கருதினார்.

இதையடுத்து, சிவில் நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நீதிபதி மறுத்துவிட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையைத் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு, மே 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அதிரடியாக உத்தரவிட்டார். இதன் மூலம் தேர்தல் முடியும் வரை பாமகவின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்துவதில் அன்புமணிக்கே சாதகமான சூழல் நிலவுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply