கெணத்த காணோம் – சினிமா விமர்சனம்

Priya
14 Views
2 Min Read

ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படும் ஒரு கிராமத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘கெணத்த காணோம்’. தண்ணீருக்காக கிணறு வெட்டும் முயற்சி, எதிர்பாராத விதமாக புதிய பிரச்னைகளை உருவாக்கும் சம்பவத்தை நையாண்டி கலந்த நகைச்சுவையுடன் சொல்ல முயல்கிறது இந்த படம்.
தண்ணீர் இல்லாத அந்த கிராமத்தில் அம்மன் கோவில் பூசாரியாக வாழ்கிறார் யோகிபாபு. பக்கத்து ஊரைச் சேர்ந்த லவ்லினை காதலிக்கும் அவர், அந்த காதலை திருமணமாக்க முயற்சிக்கிறார். ஆனால், தண்ணீர் இல்லாத ஊரில் மகளை கொடுக்க லவ்லின் தந்தை தயங்குகிறார். இதற்கிடையில், நீரோட்டம் பார்க்க அழைக்கப்பட்டவர் யோகிபாபு வீட்டில் கிணறு தோண்டலாம் என கூறுகிறார். தனது திருமணமும் நடைபெற வேண்டும், கிராம மக்களுக்கும் நன்மை நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிணறு வெட்ட யோகிபாபு சம்மதிக்கிறார்.
ஆனால், தண்ணீருக்காக தோண்டப்பட்ட அந்த கிணற்றில் டைனோசர் எலும்புகள் கிடைக்கின்றன. இதன் மூலம் அந்த கிராமமே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது. தொடர்ந்து அதிகாரிகள், போலீஸ், அரசியல்வாதிகள் என பலரும் வருகை தர, கிராம மக்களின் நிலை மேலும் சிக்கலாகிறது. அந்த எலும்புகள் என்ன ஆகின்றன? கிராமத்திற்கு தண்ணீர் கிடைத்ததா? மக்களின் பிரச்னை தீர்ந்ததா? என்ற கேள்விகளுக்கு பதில் தேடும் வகையில் கதை நகர்கிறது.
யோகிபாபுவின் வழக்கமான நகைச்சுவை எதிர்பார்ப்பை விட, இந்த படத்தில் அவர் சற்றே சீரியசான நடிப்பை கொடுத்துள்ளார். சில இடங்களில் வரும் ஒன்லைன் வசனங்கள் சிரிப்பை கிளப்பினாலும், முழு படத்திலும் காமெடி அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. லவ்லின் சந்திரசேகர் தனது கதாபாத்திரத்தை நன்றாக செய்திருந்தாலும், அவருக்கான காட்சிகள் குறைவாக இருப்பது கவனிக்கப்படுகிறது.
ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கிராமத்து தாத்தாக்கள், ஊர்மக்கள் போன்ற சிறு கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பும் வசனங்களும் படத்திற்கு ஓரளவு உயிரூட்டுகின்றன.
தண்ணீர் பஞ்சம் போன்ற சமூக பிரச்னையை நையாண்டி கலந்த காமெடி வடிவில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கையா. கிராமங்களில் இன்னமும் நீடிக்கும் தண்ணீர் பிரச்சினை, அதனைச் சுற்றிய அரசியல், அதிகார அமைப்புகள் போன்றவற்றை பகடியுடன் சுட்டிக்காட்டியிருக்கிறார். தியாகராஜன் ஒளிப்பதிவில் கிராமத்து சூழல் இயல்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது; நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை படத்துக்கு ஏற்றதாக உள்ளது.
நல்ல கரு, திறமையான நடிகர்கள் இருந்தும், சில இடங்களில் சுவாரஸ்யம் குறைவாக இருப்பது படத்தின் பலவீனமாகிறது. இருந்தாலும், கிராமத்து மக்களின் நிஜ பிரச்சினையை சுட்டிக்காட்டும் முயற்சியாக ‘கெணத்த காணோம்’ கவனம் பெறுகிறது. இயக்குனர் படம் வெளியாகும் முன்பே காலமானது இந்த படத்திற்கு ஒரு சோகத்தையும் சேர்க்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply