சென்னை தீவுத்திடலில் 48வது இந்திய சுற்றுவா மற்றும் தொழில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் ‘சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நான் முதல்வன் திட்டம், காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி உள்பட தமிழ்நாடு அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களின் 49 அரங்கங்கள் மற்றும் ஒன்றிய அரசு நிறுவனங்களின் 2 அரங்கங்கள் என மொத்தம் 51அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொருட்காட்சியில் 80,000 சதுரடி பரப்பளவில் பொழுதுபோக்கு வளாகம் அமைந்துள்ளது. அதில் ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் மற்றும் நவீன கேளிக்கை சாதனங்கள் மனதை சுவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறுவர் ரயில், பனிக்கட்டி உலகம், மீன்கள் காட்சியகம், பேய் விடு, பறவைகள் காட்சியாகம், 3D தியேட்டர், போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் தீவுத்திடல் பொருட்காட்சி தொடங்கி 14 நாட்களிலே 2,47,769 பேர் பார்வையிட்டுள்ளதாகவும், அதேபோல் ஞாயிற்று கிழமையான நேற்று ஒரே நாளில் 30000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.