தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (05.08.2024) சென்னை, சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நேரு நகரில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4 ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு பயனாளிகளின் இல்லத்திற்கே சென்று மருந்து பெட்டகம் வழங்கி, இந்த திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “மருத்துவத்தை தேடிதான் மக்கள் செல்வார்கள். ஆனால் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உலகிலேயே முதன்முறையாக மக்களைத் தேடி மருத்துவம் என்கின்ற ஒரு மகத்தான சீர்மிகு திட்டத்தை 05.08.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் தொடங்கி வைத்தார்கள்.
இந்த திட்டம் மக்களுடைய வீடுகளுக்கே தேடிச் சென்று மருத்துவ சேவைகளான உயர் இரத்த அழுத்தம் (BP), நீரிழிவு நோய் சிகிச்சை (Diabetes), உயர் இரத்த அழுத்த மற்றும் நீரிழிவுநோய் சிகிச்சை (BP and Diabetes), நோய் ஆதரவு சிகிச்சை (Palliative Care), இயன்முறை சிகிச்சை (Physiotherapy), சிறுநீரக நோய்க்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகள் வழங்குவது என்று 6 வகையான நோய்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கும் திட்டமாகும்.
“தொழிலாளரை தேடி மருத்துவம் திட்டத்தால் 3 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்” – அமைச்சர் மா.சு பெருமிதம் !
உலகளவில் 60-70% மக்கள் தொற்றா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை காப்பாற்றும் உன்னதமான திட்டமான மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1,86,13,872 பேர் பயனடைந்துள்ளனர்.
மேலும், சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களையும் அணுகி அவர்களுக்கும் இந்த திட்டத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் யாருக்காவது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உதவிகள் தேவைப்பட்டால் 104 என்ற அவசர உதவி எண்ணை அழைத்தால் உடனடியாக அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என கூறினார்