சென்னை தலைமைச்செயலகத்தில் மாநில திட்டக்குழு தயாரித்த வரைவு கொள்கைகள், அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்புகள் கூடியுள்ளதாக அறிக்கையில் தெரிய வந்துள்ளது. காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது. புதுமைப் பெண் திட்டம் மூலம் கல்லூரிகளுக்கு மாணவிகள் வருகை அதிகரித்துள்ளது.

மாநில திட்டக்குழுவின் அறிக்கைதான் தி.மு.க. ஆட்சியின் மார்க் ஷீட். கடந்த மார்ச்சில் துறை சார்ந்த 16 அறிக்கைகளை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் என்னிடம் வழங்கினார். அரசின் திட்டங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு மனிதரையும் உயர்த்தி உள்ளது.

தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும் மக்களை சென்றடைந்து வருகின்றன. மக்களை நேரில் சந்தித்து தகவல் பெற்றாலும் புள்ளி விவரங்கள் மூலம் திட்டக்குழுவினர் வழங்குகின்றனர்.

சாலை, மின்சாரம், பள்ளிகள் இல்லாத இடங்கள் இல்லை என்ற தன்னிறைவு பெற்றதாக தமிழகத்தை உருவாக்கினோம். நிதிவளம் இருக்குமானால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதால் நிதிவளம் பெருக்க ஆலோசனை தாருங்கள்” என்று அவர் கூறினார்.

மேலும் கவனம் பெறாத துறைகளையும் சரிபார்த்து திட்டங்களை தயாரித்து தருமாறும், ஆலோசனையுடன் நிறுத்திக்கொள்ளாமல் திட்டங்கள் செயல்படுவது குறித்தும் ஆய்வு செய்யுமாறும் மாநில திட்டக்குழுவினருக்கு முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here