சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள விமான நிலையம் பரந்தூரில் அமைப்பதற்கான அறிவிப்புகள் வந்ததிலிருந்து பரந்தூர் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
விமான நிலையத்திற்குத் தேவையான நிலம் கையகப்படுத்துவதற்கு முறையான இழப்பீடு தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது.. ஆனாலும் ஆர்ப்பாட்டம் அடங்க வில்லை…
இதை அரசியலாக்குவதற்கு பல்வேறு கட்சிகள் பரந்தூரில் முகாமிட்டனர்…
மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அதில் குளிர் காய வேண்டும் என்ற முனைப்போடு சிலர் அரசியல் லாபம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்..
அந்த வரிசையில் தற்போது தவெக தலைவர் விஜய்யும் சேர்ந்திருக்கிறார்…
இன்னும் சொல்லப் போனால் தன்னுடைய முதல் அரசியல் நகர்வுக்கு பரந்தூரைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்…
காரணம் இன்று நாம் அனுபவத்துக் கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டங்கள் இழப்பில் இருந்துதான் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டவை என்பதை நம்மால் ஏற்காமல் இருக்க முடியுமா?
தவெக தலைவர் விஜய் தற்போது பனையூரிலிருந்து புறப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கும் சாலையின் பெயர் ராஜீவ் காந்தி சாலை.
இந்த Rajiv Gandhi IT Corridor. சுமார் 45 கிமீ நீளத்திற்கு திட்டமிட்டு தயாரான சாலை அது.
லட்சக்கணக்கான இளைஞர்களின்/ குடும்பங்களின் எதிர்காலத்தை உறுதிசெய்திருக்கிற, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை சென்னையிலேயே தக் கவைக்கும் பொருட்டு, ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் அரசிடம் கொடுத்த பின்னர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அந்த சாலை உருவானது…
ஒவ்வொரு குடும்பமும் இழப்பீட்டைப் பெற்றாலும் கூட, தாங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டார்கள்.
அதன்மீதுதான் தமிழ்நாடு ஐடி துறை தற்போது செழித்து வளர்ந்திருக்கிறது.
இன்று அந்த இடத்தின் வளர்ச்சிக்கு காரணம் அன்று அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கொடுத்த இழப்பு…
சிறுசேரியில் அமைக்கப்பட்ட 2000 ஏக்கர் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கும் இதே நடைமுறைதான்.
சென்னை- கன்னியாக்குமரி தேசிய நெடுச்சாலைக்காக நிலங்களை இழந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர்.
சாலைகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பல்கலைக்கழகங்கள் என நாம் இன்று பயன்படுத்தி வரும் எந்தக் கட்டமைப்பை உருவாக்கினாலும் அதற்கான சமூக, பொருளாதார, சூழலியல் இழப்பை நாம் சந்தித்தே தீர வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை…
நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
நிலம் கையகப்படுத்தும்போது அரசுகள் முறையான இழப்பீடு வழங்குவதை உறுதிசெய்வதும், சட்டம் வலியுறுத்தும் எல்லா விதிகளையும் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிப்பதும்தான் தமிழ்நாடு அரசியல்கட்சிகள் இப்போது செய்தாக வேண்டியது.
சமரசமில்லாமல் இதை செய்வதே முதன்மையானதாக இருக்க வேண்டும்.
பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களை விட நம் சென்னை ஏற்கனவே பத்தாண்டுகள் பின்னால் இருக்கிறது. சென்னையின் இந்த இரண்டாவது விமான நிலையமே 15 ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருக்க வேண்டியது. இப்போதாவது வருகிறதே என்று இந்த திட்டத்தினை வரவேற்காமல் அரசியல் நோக்கில் பின்னும் வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம்..
தேசிய அளவில்’ தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளும் எல்லா முயற்சிகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, நீங்களும் அவர்களோடு கை கோர்க்காதீர்கள்…
இழப்பில்லாமல் எந்த வளர்ச்சியும் இல்லை என்பதே எதார்த்தமான உண்மை….