இது தேர்தல் காலம்‌…

இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற பேச்சு நமது வீட்டின் டிவி அறை தொடங்கி, டீக்கடை பெஞ்ச் வரை விவாதிக்கப்பட்டு வருகிறது

இதற்கு முன் அதாவது தேர்தல் என்ற சொல்லே இல்லாமல் இருந்த காலம் எப்படி இருந்திருக்கும்.. எப்படி வாக்களிக்கும் முறை உருவானது என்ற தேர்தல் முறை உருவான வரலாறைத் தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க இருக்கிறோம்.

அன்றை மன்னர் ஆட்சி காலம் என்பது சாமானிய மக்களுக்கு கொடுமையான காலமாக இருந்தது..

நிலச்சுவான் தார்கள் மட்டுமே தங்களின் சமூகம் சார்ந்த மக்களுக்காக மன்னரோடு பேசும் நிலையில் இருந்தார்கள்.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால்.. பணம் படைத்தவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.. ஏழைகள் பணக்காரர்களுக்கு அடிமையாக இருந்தார்கள்.

இதனால் ஏழைகளால் தங்கள் குறைகளை மக்களிடம் தெரியப்படுத்த முடியாத நிலை இருந்தது. அப்படியென்றால் அவர்கள் குறைகளை யார்தான் மன்னரிடம் எடுத்துரைப்பது.. என்ற கேள்வி எழுந்த நிலையில் தேர்தல் முறையை உலகிற்கு கற்றுக் கொடுத்தது நம் தமிழ் இனம்தான்..

தஞ்சை மண்டலத்தை பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்த சோழர் காலத்த்தில் தான் தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இடைக்காலச் சோழர்களின் ஆட்சி காலத்தில் அதாவது கி.பி 9ம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை இந்த குடவோலை தேர்தல் முறை வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது.

தஞ்சை மண்டலத்தை 907 ஆம் ஆண்டு தொடங்கி 955 ஆம் ஆண்டு வரை ஆண்ட முதலாம் பராந்தக சோழன் காலத்திற்கு உட்பட்ட மூன்று கல்வெட்டுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

இந்த கல்வெட்டுகளில் இரண்டு காஞ்சிபுரம் அருகே உள்ள உத்திரமேரூரிலும், இன்னொன்று தஞ்சை பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக உத்திர மேரூரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் கிராமிய உள்ளாட்சி அமைப்பு குறித்த தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன.

அந்த ஊரில் மகா சபா, ஊர் ஆகிய இரண்டு கிராம சபைகள் செயல்பட்டு வந்திருப்பதையும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இந்திய வரலாற்றிலேயே முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச்சீட்டை அறிமுகம் செய்தவன் முதலாம் பராந்தகச் சோழன் தான்..

இந்த தேர்தல் முறைப்படி ஊர் மக்களில் ஒருவர் யாரை விரும்புகிறாரோ அவரது பெயரை ஓலைச்சுவடியில் பதிவிட்டு அதனை அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு குடத்திற்குள் போட்டு விட வேண்டும்.

அதுதான் அக்கால வாக்கு சீட்டு; அப்படி போடப்படும் ஓலைகளை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த கல்வெட்டுகள் குறிப்பிடுவதைப் போல், சதுர்வேதி மங்கலம் 30 குடும்புகள் என்று அழைக்கப்படக் கூடிய வார்டுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பிலிருந்தும் ஒரு பிரதிதியை தேர்ந்தெடுத்து பொதுச் சபைக்கு அனுப்பலாம்.

இந்தக் குடும்புகளில் இருப்பவர்களே குடவோலை முறை தேர்தலில் பங்கேற்று தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும்.

அமெரிக்கா போன்ற உலகின் பல நாடுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே நம் தமிழினம், ஆட்சி நிர்வாகம் குறித்தும், மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் தேர்தல் முறை குறித்தும் தெரிந்து வைத்திருக்கும் அறிவை பெற்று இருந்திருக்கிறது.

எழுத்தறிவு பெறாத மக்களைக் கொண்ட அந்த சமூகத்திலும் தேர்தலில் நிற்பதற்கு ஒருவருக்கு எந்த மாதிரியான தகுதிகள் இருக்க வேண்டும் என்கிற வரையறை கூட செய்யப்பட்டிருக்கிறது.

அதாவது தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர் ,

கால் நிலத்துக்கு மேல் அரை நிலம் உடையவராக இருக்க வேண்டும்;

தனது நிலத்திலேயே வசிப்பதற்கான வீட்டை அவர் கட்டியிருக்க வேண்டும்;

அவர் 35 வயதிலிருந்து 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்;

வேதங்களை எடுத்துரைக்கும் புலமை இருக்க வேண்டும்;

வேதம் தெரிந்தவர்களுக்கு ஒரு சில சலுகைகளையும் அப்போதைய தேர்தல் முறை வழங்கி இருந்தது.

ஒரு வேதமாவது அறிந்தவனுக்கு அரைக்கால் நிலம் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம்;

இப்போது போல தேர்தலில் போட்டியிடும் ஒருவர் வெள்ளை உடுப்போடு இருந்து விட்டால் மட்டும் போதாது.மனதளவிலும் சுத்தம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

இதேபோல் யாரெல்லாம் போட்டியிட தகுதியற்றவர்கள் என்பதையும் அக்கால குடவோலை தேர்தல் முறை வரையறை செய்து வைத்திருக்கிறது.

பிறரது சொத்தை அபகரித்தவன்,

தடை செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக் கொண்டவன்;

தகாத உறவு கொண்டவன்;

கடமை தவறியவரின் தகப்பன்;

கடமை தவறியவரின் மகன்;

கடமை தவறியவரின் ரத்த வழி சகோதரர்;

கடமை தவறியவரின் மாமனார்;
முட்டாளாக இருப்பவன் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

இது போன்ற தகுதி இழந்தவர்கள், தங்கள் வாழ்நாளின் இறுதிவரை எந்த ஒரு குழுவிற்காகவும் பானையில் போடப்படும் குடவோலையில் அவர்களின் பெயர்களை எழுத கூடாது. அதாவது அவர்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்தவர்களாவர்.

தேர்தல் முடிந்து குடவோலைகளை எண்ணும் போது, மகாசபையில் பொதுக்குழு கூட்டம் இளைஞர்கள் மற்றும் வயதான உறுப்பினர்கள் உட்பட அங்கு இருப்பவர்கள் அனைவரும் கூட்டப்பட வேண்டும்.

அன்றைய தினம் கிராமத்தில் இருக்கும் அனைத்து கோவில் பூசாரிகளும் கட்டாயம் பொதுக்குழு கூடும் உள் மண்டபத்தில் அமர வைக்கப்பட வேண்டும்; பின்னர் பூசாரிகளுள் மூத்தவர் ஒருவர் எழுந்து நின்று அனைவருக்கும் தெரியும்படி மேல்நோக்கி குட ஓலைகளை கொண்ட பானையை தூக்கி காண்பிப்பார்; அந்த பானைக்குள் என்ன இருக்கிறது என்பதை அறியாத ஒரு சிறுவனால் குடும்பைக் குறிக்கும் பொட்டலம் வெளியே எடுக்கப்பட்டு மற்றொரு காலி பானைக்கு மாற்றப்படும்; அதிலிருந்து ஒரு குடவோலை எடுக்கப்பட்டு மத்தியஸ்தர் எனப்படும் நடுவரிடம் ஒப்படைக்கப்படும்.

பின்னர் அதில் இருக்கும் பெயர் வாசிக்கப்படும்; இவ்வாறு முப்பது குடும்புகளுக்கும் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.

அந்த 30 பேர் தோட்ட வாரியம், ஏரி வாரியம் போன்றவற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்; அவர்கள் 360 நாட்கள் இந்த பதவிகளில் இருக்கலாம் என்பதும் வரையறை செய்யப்பட்டுள்ளது .

இப்படியாக பல விதிமுறைகளை கொண்டதாக குடவோலை முறை தேர்தல் நடத்தப்பட்டு வந்திருக்கிறது.

கற்றறிந்த இன்றைய சமூகத்தில் இருப்பதை விடவும் இந்த குடவோலை தேர்தலில் அத்தனை நிபந்தனைகள், அத்தனை விதிமுறைகள் மிகவும் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு இருக்கின்றன என்பது மிகவும் வியப்பாகவே இருக்கிறது.

அது மட்டும் இல்லை; இந்த ஆண்டின் குடியரசு தின விழாவில் கூட தமிழகம் சார்பில் அணிவகுப்பில் களமிறக்கப்பட்ட அலங்கார ஊர்தி, உத்திரமேரூர் குடவோலை முறை கல்வெட்டை சித்தரித்தது.

இதனால்தான் ஒவ்வொரு முறை நமக்கு தேர்தல் வரும் போதெல்லாம் உத்திரமேரூர் சோழர்கால குடவோலை கல்வெட்டுகள் பேசு பொருளாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here