முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின்போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அதன்படி, முதலமச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று மாலை விழுப்புரம் புறப்பட்டார்.

இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் நகரில் சென்னை சாலையில் மேம்பாலம் வழியாக ஜே.வி.எஸ். திருமண மண்டபம் வரை ரோடு ஷோ நடத்தினார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர் அந்த திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழுப்புரம் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டார். பின்னர் திண்டிவனத்தில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் வந்தடைந்தார். அங்கு மாவட்ட அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் நேற்று இரவு தங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரத்தில் கள ஆய்வு மேற்கொள்ள சென்றிருந்தார்.

அப்போது சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூ, சால்வை உள்ளிட்டவற்வை வழங்கி உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்.

இந்த நிலையில், விழுப்புரத்தில் அவருக்கு அளித்த உற்சாக வரவேற்பை நினைவு கூறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நிலம் நனைக்கும் வான்மழையென உங்கள் அன்பு! நனைகிறேன்; இன்னும் இன்னும் உழைக்க உரம் பெறுகிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here