சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராவதற்கு 39 புதிய வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்க கடந்தாண்டு டிசம்பர் 20 ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில் எடுத்த முடிவுகளின் படி சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிமன்றங்களில், வேத பகத் சிங், புருசோத்தமன், செந்தில் முருகன், பரணிதரன், ஹர்ஷாராஜ் உள்ளிட்ட 8 வழக்கறிஞர்கள் சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அஸ்வினி தேவி, சித்தார்த், சரவணன், இந்துபாலா உள்ளிட்ட 7 வழக்கறிஞர்கள் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றவியல் வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களாக பாஸ்கரன், உதயகுமார் உள்ளிட்ட 7 வழக்கறிஞர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. உமாகாந்த், கருணாநிதி, வெங்கட சேசய்யா உள்ளிட்ட 16 வழக்கறிஞர்கள் உரிமையியல் தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் வழக்கறிஞர்களாக ஆஜராவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் அஜாராக வழக்கறிஞர் செல்வி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைகளில் 39 புதிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அரசு தரப்பில் ஆஜராகி வாதாடுவார்கள்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here