வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகும் நிலையில், அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், வரும் நாட்களில் தமிழ்நாட்டில் நிலவும் வானிலை மாற்றங்கள், வெப்பநிலை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கைகள் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 25ஆம் தேதி மத்திய மியான்மர் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது, மேற்கு திசையில் நகர்ந்து, செப்டம்பர் 26ஆம் தேதி தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், செப்டம்பர் 27ஆம் தேதி தெற்கு ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்கான வாய்ப்புகள்: இந்த வானிலை மாற்றத்தால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (செப்டம்பர் 24) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (செப்டம்பர் 25) மற்றும் செப்டம்பர் 27ஆம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 26ஆம் தேதி கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 28 முதல் 30 வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தமிழக கடலோரப்பகுதிகள்: செப்டம்பர் 24 முதல் 28 வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
- வங்கக்கடல்: செப்டம்பர் 24 முதல் 28 வரை மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
- அரபிக்கடல்: செப்டம்பர் 24 முதல் 28 வரை தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.