தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, தேனி, தென்காசி, மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் இணைந்து தமிழகத்தில் மழைப்பொழிவை அதிகரிக்கச் செய்துள்ளன. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்
இன்று (ஜூலை 23) நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்ற வானிலை நாளையும் (ஜூலை 24) தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் வானிலை முன்னறிவிப்பு
ஜூலை 25ஆம் தேதி, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 26ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.