தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில்,இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா அளித்துள்ள பேட்டியில்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை காயல்பட்டினம்,திருச்செந்தூர் ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் 16 இன்று வரை 10 செமீ அளவு மழை பதிவாகியுள்ளது.இன்று வரை இயல்பை விட 37 % அதிகமாகவே மழை பதிவாகியுள்ளது.இன்றைய நிலவரப்படி,குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வருகின்ற 18 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கேரள தெற்கு கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. வருகின்ற 24 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உண்டாக கூடும்.இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் சாத்தியம் இருக்கிறது.அடுத்த மூன்று தினங்களில் தமிழகத்தின் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைப் பெய்யக்கூடும்.
கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தினங்களில் தமிழகத்தின் ஓரிரு இடங்களும் ,புதுவை மற்றும் காரைக்காலில் கன முதல் மிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.இன்று (அக்டோபர் 16) தேனி,விருதுநகர்,ராமநாதபுரம் ,தென்காசி,தூத்துக்குடி,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
நாளை(அக்டோபர17) தென்காசி,தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்காக எச்சரிக்கை
அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழக கடலோர பகுதிகள், மன்னார்வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள்,தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்,தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள்,கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் லட்சத்தீவு ,மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. நாளை (அக்டோபர் 17) மிதமான மழை பெய்ய வாய்ப்புண்டு என தெரிவித்தார்.