வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கொடுங்கையூர் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி மற்றும் கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
“வங்கக்கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்யும் நிலையில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
வட சென்னை பகுதியில் வார்டு 37-இல் குப்பை சேகரிப்பு வளாகத்தின் பிரதான வாயில் பகுதியில் உள்ள கொடுங்கையூர் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியையும், கால்வாய் அகலப்படுத்தும் பணியையும் ஆய்வு செய்தோம்” என தெரிவித்துள்ளார்.

