தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வருகின்ற 27 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாகவும் வலுவடைந்து, 28 ஆம் தேதி தீவிர புயலாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று காலை ( 24-10-2025 ) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவியது. அது இன்று காலை ( 25-10-2025 ) காலை 5:30 மணியளவில் மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 26 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 27 ஆம் தேதி காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடைந்து, வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 28 ஆம் தேதி தீவிர புயலாக வலுபெறக்கூடும்.
இந்த புயல், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளில் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிர புயலாக 28 ஆம் தேதி மாலை – இரவு நேரத்தில் கரையை கடக்க கூடும்.
புயலின் காரணமாக காற்றின் வேகம் 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று ( 25-10-2025 ) மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்
தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருநெல்வேலி,தென்காசி,கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவையிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை ( 26-10-2025 ) மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்
தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் ( 27-10-2025 ) மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்
சென்னை, திருவள்ளுர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
விழுப்புரம் ,செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்காக எச்சரிக்கை
25-10-2025 முதல் 29-10-2025 வரை தமிழக கடலோர பகுதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

