தமிழக வெற்றிக் கழகக் கொடியை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் திறந்து வைத்தார்.

பின்னர் விஜய் பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம், இன்று நம் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாள். எனது அரசியல் பயணத்தைத் தொடங்க இங்கு வந்த நான், கடந்த ஆண்டு பிப்ரவரியில் எனது கட்சியின் பெயரை தொடக்கப் புள்ளியாக அறிவித்தேன். அன்று முதல் நீங்கள் அனைவரும் இந்த நாளுக்காகத்தான் காத்திருக்கிறீர்கள் என்பது எனக்குப் புரிந்தது.

நமது முதல் மாநாடு நடத்த, அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது.
எப்போது என்று உங்களுக்கு கூடிய விரைவில் அறிவித்துவிடுவேன். அதற்கு முன்னதாக நீங்க எல்லாரும் கொண்டாடி மகிழ்வதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் எனது தோழர்களாகிய, உங்கள் முன்னாடியும், எனது நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் முன்னாடியும், கொடியை அறிமுகப்படுத்தியது மிகவும் பெருமையாக உள்ளது என்று தெரிவித்தார்.

இதுவரைக்கும் நமக்காக உழைத்தோம். இனி வருங்காலங்களில், நம்மை ஒரு கட்சி ரீதியாக தயார் படுத்தி கொண்டு தமிழகத்திற்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும், நம்ம எல்லாரும் சேர்த்து உழைப்போம். புயலுக்கு பிறகு அமைதி, ஆர்ப்பரிப்பு இருப்பது போல, நமது கொடிக்கு பின்னாடியும் ஒரு வரலாற்று குறிப்பு உள்ளது. நம்முடைய கொள்கைகள் என்ன? நமது செயல்திட்டங்கள் என்ன? என்று சொல்லும் போது, அன்றைக்கு கொடிக்கு பின்னாடி உள்ள விளக்கத்தையும் சொல்வேன்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு சந்தோஷமாக, ஒரு கெத்தாக நம்ம கட்சி கொடியை ஏற்றி கொண்டாடுவோம். கட்சி கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழகத்தோட வருங்கால தலைமுறைக்கான வெற்றி கொடியாக பார்க்கிறேன். கட்சி கொடியை உங்க இல்லத்துல, உள்ளத்துல, நான் சொல்லாமலே ஏற்றுவீங்க என்று தெரியும். இருந்தாலும் முறையான அனுமதி வாங்கிட்டு, அந்த ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன் எல்லாம் பாலோ செய்து விட்டு, அனைவரிடமும் தோழமையை பாராட்டி நமது கட்சி கொடியை ஏற்றி கொண்டாடுவோம். நம்பிக்கையாக இருங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி. வணக்கம். என்று தனது உரையை முடித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here