கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை இரண்டு வாரத்திற்கு முன்பு கோவை செல்லும்போது தொடங்கியுள்ளதாக கூறிய உதயநிதி, கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான பணிகள் இந்தாண்டு தொடங்கப்படும் எனவும் உறுதிப்பட தெரிவித்தார்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் கூடுதல் விளையாட்டுகள் சேர்க்கப்பட வேண்டும் என்ற நமது சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஏற்பட்டு, இந்த ஆண்டு முதல் புதிய விளையாட்டுகள் சேர்க்கப்படும் என தெரிவித்தார். 2021ல் தி.மு.க ஆட்சி அமைந்ததில் இருந்து இதுவரை மொத்தம் 2,860 வீரர்களுக்கு 102 கோடியே 72 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மற்ற வீரர்களுக்கு இணையாக தமிழ்நாட்டில் தான் தேசிய போட்டிகளில் வெற்றிபெறும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் 14 லட்சத்து 68 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கடந்த முறை நடந்த ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. அதனை வருகிற பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இன்றுவரை தமிழ்நாட்டு வீரர்கள் 16 பேர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்ட ஒரே வருடத்தில் 375 விளையாட்டு வீரர்களுக்கு இதுவரை 8 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதியுதவியாக – ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. பயன்பெற்ற வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் 21 தங்கம் உட்பட 62 பதக்கங்களை வென்று, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்காக மத்திரபிரதேச அரசுக்கு ரூ.25 கோடி வழங்கிய ஒன்றிய அரசு, தமிழ்நாடு நடத்திய கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்காக ரூ.10 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியது என உதயநிதி விமர்சித்தார்.
முன்னதாக தனது உரையின் துவக்கத்தில் பேசிய உதயநிதி, விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால் ஒரு சில பேரின் பெயர்கள் தான் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். ஓட்டப்பந்தயம் என்றால் உசேன் போல்ட்; கிரிக்கெட் என்றால் எம்.எஸ். தோனி. ஒவ்வொரு போட்டியிலும் இவர்களின் சாதனைகளை இவர்களே முறியடித்துக் கொள்வார்கள்.
அதேபோல அரசியல் களத்தில் நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், களம்கண்ட அனைத்து தேர்தல்களிலும் முந்தைய வெற்றிகளை முறியடிக்கும் வகையில் வெற்றிகளை குவித்து வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக அணி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக விளையாடி – உழைத்து 40க்கு 40 பதக்கங்களையும் வென்று, சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியை அளித்த மக்களுக்கு சட்டப்பேரவை மாமன்றத்தின் மூலம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கெல்லாம் காரணம் தி.மு.க எனும் திராவிட அணியின் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தான் என தெரிவித்தார்.