மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையை பாதுகாப்போம் என்று இந்து அமைப்பினர் ஒன்று கூடி இன்று போராட்டம் நடத்தப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி கடந்த 2 தினங்களாக மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தார்.

இதன்படி திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சூழலில் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று மாலை 5-6 மணிக்கு இந்து முன்னணி அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை அனுமதி வழங்கியது.

அதைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானவர்கள், மதுரை பழங்காநத்தம் பகுதியில் கூட்டம், கூட்டமாக குவிந்தனர். இதனை தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநில செயலாளர் சேவுகன், புதுச்சேரி மாநில தலைவர் குமார், ஆர்.எஸ்.எஸ். தென் பாரத அமைப்பாளர் வன்னியராஜன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் 2 நாட்கள் 144 தடை உத்தரவுக்கு பின்னர் திருப்பரங்குன்றம் பகுதியில் இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளது. சுப்ரமணிய சுவாமி கோவிலில் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர், சிக்கந்தர் தர்காவிற்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் அனுமதி இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் நேற்று அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா, இந்து முன்னணியைச் சேர்ந்த 195 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் திருப்பரங்குன்றம் காவல்துறையினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here