இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் மட்டும் வள்ளுவர் கோட்டம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஐஸ்ஹவுஸ் என பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அமித்ஷாவின் கருத்துக்கும், பா.ஜ.க.வின் வல்லாதிக்க போக்கிற்கும் கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.

அதன் ஒரு பகுதியாக வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “உள்துறை அமைச்சர் ஆணவத்துடனும், அகங்காரத்துடனும் இழிவுபடுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அதற்கு நம்முடைய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகப்பெரிய கண்டனத்தை எழுப்பி இந்தியா முழுவதும் உற்று நோக்கும் வகையில் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு, சமூக நீதி சீர்த்திருத்த கருத்துகளுக்கு மாறுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது” என பேசினார்.

மயிலாப்பூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய மயிலை வேலு, “சமூக நீதி காத்தவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை பாதுகாக்க பாடுபட்டவர்களுக்கு ஏதேனும் மரியாதை குறைவு ஏற்பட்டால் தி.மு.க முன் வந்து நிற்கும். ஜனநாயக நாட்டில் அரசமைப்பு சட்டம் இருக்க காரணமாக இருந்த சட்டமாமேதை அம்பேத்கர், படிக்கவே கூடாது என்று இருந்த சமூகத்தில் இருந்து வந்து சட்டம் படித்தவர்.

அவரை அவமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் பெயர் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here